சீனாவில் இருந்து இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கில், லேப்டாப், கேமரா உள்ளிட்ட குறிப்பிட்ட 20 பொருட்களுக்கான சுங்கவரியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சீனா உடனான வர்த்தக பரிவர்த்தனைகளைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அதன்படி, தற்போது சீன பொருட்கள் மீதான சுங்கவரியை அதிகரித்து, இறக்குமதியை கட்டுப்படுத்தும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
லேப்டாப், கேமரா, துணி வகைகள் மற்றும் அலுமினியம் பொருட்களை ஆகியவை இந்த பட்டியலில் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பான பட்டியைலை மத்திய சுங்க அமைச்சகம் ஏற்கனவே தயாரித்து விட்டதாகவும், ஒப்புதலுக்காக மத்திய நிதியமைச்சகத்திடம் சமர்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கட்டண உயர்வின் மூலம் அரசின் வருவாய் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
வரி அதிகரிப்பு, சீன பொருட்கள் மீதான குறிப்பிட்ட நடவடிக்கை இல்லை என்றாலும், அங்கிருந்து அதிகம் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கவனத்தை செலுத்துவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, வருவாய்த்துறையின் அறிவுறுத்தலின்படி கடந்த சில வாரங்களில் சீனாவின் டயர் மற்றும் கண்ணாடிப் பொருட்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்ததோடு, இலவச வர்த்தக ஒப்பந்தங்களை கொண்ட தாய்லாந்து அல்லது வியட்நாம் ஆகிய நாடுகளுடன் வணிகத்தில் ஈடுபட இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.
இதனிடையே, சில எஃகு பொருட்களின் இறக்குமதிக்கும் கட்டுப்பாடுகளை விதிக்க, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் , சுமார் 3 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி என கூறப்படுகிறது.