நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி வழக்கமான உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்படுகிறது. வீடுகள் தோறும் குழந்தைகளை கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரித்தும், பகவான் கிருஷ்ணருக்கு உகந்த பிரசாதங்களைப் படையலிட்டும் மகிழ்கின்றனர்.
தர்மம் தழைக்க, அதர்மம் வீழ கண்ணன் பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தி என்றும், கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியில் நள்ளிரவு நேரத்தில் கண்ணன் அவதரித்ததாக கூறப்படுகிறது. இரவில் பிறந்ததால் கருமை நிறத்தில் பிறந்ததாக கண்ணன் பற்றி கூறப்படுவதுண்டு.
தேவகியின் வயிற்றில் குழந்தையாக சிறையில் பிறந்து தயிரும் வெண்ணையும் திருடித் தின்று குறும்புகள் புரியும் பாலகனாக யசோதையிடம் வளர்ந்தான் கண்ணன்.
வளர்ந்த பருவத்தில் ராதையை காதலித்து காதலின் மகத்துவத்தை தனது ராசலீலைகள் மூலம் உணர்த்தியவன் கண்ணன்.
குதூகலமும் துள்ளலும் நிறைந்தது கண்ணனின் திரு அவதாரம். மீராவும் ஆண்டாளும் கண்ணனுக்காக உருகியவர்கள். இதனால் காதல் தெய்வமாக கண்ணன் காட்சியளிக்கிறான்.
குழந்தையாகவும் காதலனாகவும் கீதை உரைத்த கண்ணன், பகவத் கீதையை உரைத்த போது ஞானியாக காட்சியளித்தான். உலகின் மந்திரம் அனைத்தையும் இயக்கும் மாயவிரலோன் தானே என்று உரைக்கிறான் கண்ணன்.
இத்திருநாளில் கண்ணனை வணங்கினால் கவலைகள் தீரும் மகிழ்ச்சி பிறக்கும், வாழ்க்கையை வழிநடத்தும் சாரதியாக அவன் துணை என்றும் இருக்கும் என்று கோடிக்கணக்கான மக்கள் நம்புகிறார்கள்.