எல்லையில் சீனா உடன் மோதல்போக்கு நிலவும் சூழலில் ஏவுகணையை செலுத்தும் திறன் கொண்ட, இஸ்ரேலின் ஹெரான் ட்ரோன்களை வாங்க இந்திய ராணுவம் ஆர்வம் காட்டியுள்ளது.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள புராஜக்ட் சீடா எனும் திட்டத்தின் பெயரில், 90 ட்ரோன்களை வாங்க சுமார் மூவாயிரத்து 500 கோடி ரூபாய் செலவாகும் என கூறப்படுகிறது. இந்த ஆளில்லா சிறிய ரக விமானம் லேசர் ஒளிக்கற்றை வழிக்காட்டுதலுடன், ஏவுகணைகளை செலுத்தும் திறன் கொண்டது.
இதன் மூலம் ஆகாயத்திலிருந்தவாறே தரையில் உள்ள இலக்குகளை துல்லியமாக அழிக்கவும், டேங்கர்களுக்கு எதிர்தாக்குதல் நடத்தவும் முடியும். எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க இந்த ட்ரோன்கள், கூடுதல் பலமாக இருக்கும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.