ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏக்கள் 12 பேர் ஏற்கனவே குஜராத் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 6 எம்எல்ஏக்கள் குஜராத் சென்றுள்ளனர்.
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களின் கிளர்ச்சியைத் தொடர்ந்து அங்கு பெரும்பான்மையை நிரூபிக்க சட்டசபை கூட்டப்பட உள்ளது.
வரும் 14ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், குதிரை பேரத்தை தடுப்பதற்காக பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் குஜராத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா, தங்களது கட்சி எம்எல்ஏக்கள் ஒற்றுமையாக இருப்பதாகவும், பாஜக எம்எல்ஏக்களை குழப்பமடையச் செய்ய சமூக ஊடகங்களில் ஆளும் காங்கிரஸ் கட்சி மூலம் வதந்திகள் பரப்பப்படுகிறது என்றும் குற்றம்சாட்டினார்.