கேரளாவில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, விபத்திற்கான காரணம் குறித்து விமானப் போக்குவரத்துத் துறை புலனாய்வு பிரிவு தனது விசாரணை தொடங்கியுள்ளது.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ், துபாயில் இருந்து 186 பேருடன் கோழிக்கோடு வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸின் Boeing 737 ரக விமானம், கோழிக்கோடு விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு தரையிறங்க முயன்றது.
அப்போது கனமழை பெய்ததால் விமானம் வழுக்கிக்கொண்டு சென்று ஓடுதளத்தில் இருந்து 35 அடி பள்ளத்தில் விழுந்து இரு துண்டுகளாக உடைந்தது. இந்த விபத்தில் விமானி, இணை விமானி உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் விமானிகளின் கடைசிநேர உரையாடல் உள்ளிட்டவற்றை பதிவு செய்யும் கறுப்பு பெட்டி, விமானம் எப்படி இயக்கப்பட்டது என்பதை டிஜிட்டல் முறையில் பதிவு செய்து வைத்திருக்கும் கருவி ஆகியவற்றை விமானத்தில் இருந்து மீட்டனர். விமான விபத்துக்கான காரணங்களை தீர்மானிப்பதில் மிக முக்கியமான ஆதாரமாக கருதப்பட்ட இந்த சாதனங்கள் பகுப்பாய்விற்காக டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதனிடையே விபத்து நடந்த கோழிக்கோடு விமான நிலையத்திற்கு, டெல்லி மற்றும் சென்னையில் இருந்து விமான பாதுகாப்பு துறை அதிகாரிகள் சென்றடைந்தனர். அங்கு பல்வேறு தரப்பினருடன் விசாரணை நடத்தினர்.
விமான விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமா அல்லது மனித தவறு காரணமா என்பது விரைவில் தெரியவரும் என விமான விபத்து புலனாய்வு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் விமான நிலையத்தில் சுமார் எட்டாயிரம் அடி நீளமுள்ள ஓடுபாதை போயிங் ரக விமானங்கள் தரையிறங்குவதற்கு போதுமானது எனக்குறிப்பிட்ட அவர், ஆனால் தற்போது விபத்துக்குள்ளான விமானம் 3000 அடி தூரத்தில் தரையிறங்கியுள்ளதாக கூறினார். எனவே கருப்புப்பெட்டி சரிபார்த்த பின்னரே விபத்து குறித்து தெளிவாக கூறமுடியும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.