கோழிக்கோடு விமான விபத்து இந்தியாவையே அதிர வைத்துள்ளது. விமான விபத்துக்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இந்த விபத்தால் பல குடும்பங்களை தாங்க முடியாத அளவுக்கு துயரத்துக்குள்ளாகியுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்களில் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஷாராஃபூ பிலாசேரியின் குடும்பமும் ஒன்று.
பேரிடர் காலத்தில் வாழ்ந்த நாட்டிலிருந்து தாய் நாட்டுக்கு போகப் போகிறோம் என்பதே கடும் உற்சாகத்தை தரும். அந்த உற்சாகத்துடன்தான் ஷாராஃபூ தன் மனைவி மகளுடன் துபாயிலிருந்து விமானத்தில் இந்தியாவுக்கு கிளம்பினார்
ஆனால், விமானம் தரையிறங்கிய போது ஷாராஃபூ உயிருடன் இல்லை. விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியாகி விட்டார். இவரின் மகள் இஷா பாத்திமா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .ஷாராஃபூவின் மனைவி அமீனா உயிர் தப்பி விட்டார். கணவரை இழந்து விட்ட நிலையில் மகளையும் இழந்து விடுவோமோ என்ற தவிப்பில் மருத்துவமனையில் அவர் கதறி அழுதபடி தவிப்பது உறவினர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
விபத்தில் சிக்கிய விமானம் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்துமே ஷாராஃபூ தன் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து ' தாய் நாட்டுக்கு வந்து விட்டோம் ' என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். ஆனால், சற்று நேரத்திலேயே ஷாராஃபூ உயிருடன் இல்லை என்பதை அவரின் நண்பர்களால் நம்பவே முடியவில்லை.
ஷாராஃபூவின் நண்பர் ஷாபி என்பவர் ஷார்ஜா நகரில் அல் ஷாமிக் என்ற பெயரில் ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார். கொரோனா காலத்தில் ஏழைகளுக்கு இந்த ரெஸ்டாரன்ட் வழியாகஷாராஃபூ உணவு வழங்கி வந்துள்ளார். இந்தியாவுக்கு விமானம் ஏறும் ஒரு நாளுக்கு முன்னதாக கூட அந்த ரெஸ்டாரன்ட்டுக்கு சென்று பலருக்கு உணவு வழங்கியதாக ஷாபி கூறியுள்ளார்.