‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் துபாயிலிருந்து இந்தியா வந்த ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் 737’ விமானம் கேரளாவின், கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. ஓடுதளத்திலிருந்து வழுக்கிச் சென்ற விமானம் 35 அடி பள்ளத்தில் விழுந்து இரு துண்டுகளாக உடைந்தது. இந்த கோர விபத்தில், இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர். 120-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் அமைக்கப்பட்ட தகுதியில்லாத விமான ஓடுதளத்துக்கு, விதிமுறைகளுக்கும் மாறாக விமான போக்குவரத்துத் துறை இயக்குநரகம் அனுமதி அளித்ததே இந்த விபத்துக்கான காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரிப்பூர் விமான நிலைய ஓடுதளம் சரிவு பகுதியைக் கொண்டுள்ளது. அதாவது , டேபிள் டாப் ரன்வே. ஓடுதளத்தின் முடிவுப் பகுதியில் போதிய இடவசதி இல்லை. ஓடுதள முடிவில் 240 மீட்டர் அளவுக்குக் காலியிடம் அமைந்திருக்க வேண்டும். ஆனால் இங்கு 90 மீட்டர் அளவுக்கே இடம் உள்ளது. இது தவிர, ஓடுதளத்தின் இரு பகுதிகளிலும் 100 மீட்டர் அளவுக்குக் கட்டாயம் காலியிட வசதி விடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இங்கு 75 மீட்டர் அளவுக்கே காலியிடம் விடப்பட்டு உள்ளது என்று பல்வேறு விதிமுறை மீறல்கள் கரிப்பூர் விமான ஓடுதளத்தில் நடந்துள்ளது.
கரீப்பூல் விமான ஓடுதளம் குறித்து கேப்டன் ஆனந்த் மோஹன் ராஜ் என்ற விமானி தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “2010 - ம் ஆண்டு மோசமான விமான விபத்து ஏற்பட்ட மங்களூர் விமான ஓடுதளத்தைத் தான் விமானிகள் அனைவரும் மோசமான ஓடுதளம் என்று குறிப்பிடுவர். ஆனால், எனது அனுபவத்தில், கரிப்பூர் விமான நிலைய ஓடு தளத்துடன் ஒப்பிடுகையில் மங்களூர் ஓடுதளத்தைச் சிறந்தது என்பேன். அந்த அளவுக்கு மோசமாக உள்ளது கரிப்பூர் ஓடுதளம்.
விமானம், தரையிறங்கும் போது 200 அடி உயரத்தில் இருக்கும் போது, ஓடுதளத்தில் எரியும் ஒரு மின் விளக்காவது கண்ணில் தெரியவேண்டும். அந்த வெளிச்சத்தை அடிப்படையாகக்கொண்டுதான் விமானி விமானத்தை ஓடுதளத்தில் இறக்குவார். இந்த முக்கியமான லைட்டிங் சிஸ்டம் கரிப்பூர் விமான ஓடுதளத்தில் மிகவும் மோசமாகவே இருந்தது. நாங்கள் பலமுறை முறையிட்டும் எந்தவொரு அதிகாரியும் இரண்டு மின்விளக்குகளைக் கூட கூடுதலாகப் பொருத்தவில்லை. எனது அனுபவத்தில் கரிப்பூரைப்போல வேறு எங்கும் இவ்வளவு மோசமான ஓடுதள மின்விளக்கு அமைப்பைப் பார்த்தது இல்லை” என்று கூறியுள்ளார்.
விமான விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சகம் குழு அமைத்துள்ளது.எனவே, விமான விபத்துக்கான காரணம் விரைவில் வெளி வரும் என்று நம்பப்படுகிறது.