தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 80 பேர், மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மாயமான நிலையில், 50 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. கடும் மழையால் அதிகாலையில் நிகழ்ந்த சோக சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் இடுக்கி மாவட்டத்தில் இரு தினங்களாக கடும் மழை கொட்டி தீர்த்து வருகிறது.
வெள்ளிக்கிழமை அதிகாலை பொழிந்த கனமழை காரணமாக மூணாறு அடுத்த தேவிக்குளம் நமயக்காடு எஸ்டேட் பகுதியில், தமிழகத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் தங்கி இருந்த பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்ப்பட்டது.
இதில், அந்த பகுதியை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவில் சிக்கின. அப்படியே மண் சரிவில் இழுத்துச்செல்லப்பட்டதால் அந்த வீடுகளில் தங்கி இருந்த 80 பேர் வரை மாயமானதாக கூறப்பட்டது. இதில் 50 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.
இந்த நிலையில் கேரள காவல்துறையினர், பேரிடர் மீட்புக்குழுவினர் அங்கு மீட்புப் பணிகளை மேற்க் கொண்டு வருகின்றனர். இதுவரை மண்ணில் புதைந்த 17 பேரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவில் சிக்கியவர்கள் அனைவரும் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பாரதி நகரை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த கோர விபத்து குறித்து கேரள அரசு, தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்தது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மூலம் கயத்தாறில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரு மாநில அரசுகளும் உடனடியாக உறவினர்களுக்கும் இ.பாஸ் வழங்கியுள்ளன.
இதையடுத்து,10 பேர் ஒரு வேனில் இடுக்கி மாவட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். தமிழகத்தில் இருந்து வருவோரை 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே சடலத்தை அடையாளம் காண அனுமதிப்போம் என்று கேரள அரசு கூறியிருப்பதால், பலியானவர்களின் உறவினர்கள், தங்களுக்கு கேரள அரசு தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட எந்த இடையூறும் ஏற்படுத்தக்கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளனர்
அந்த பகுதியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பம் குடும்பமாக தங்கி பணிபுரிந்து வந்ததாகவும், நிலச்சரிவு பகல் நேரத்தில் நிகழ்ந்திருந்தால் இந்த அளவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என்றும், அதிகாலையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவர்கள், தங்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை உணரும் முன்னமே பலியாகியிருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் உறவினர்கள்
இந்த துயர சம்பவத்திற்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேரள அரசு அங்குள்ள தமிழர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏற்கனவே கொரோனாவால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த இழப்பு, அவர்களது குடும்பத்தினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.