தன் உடல் மீது குழந்தைகளை ஓவியம் வரைய செய்த பெண் செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமாவுக்கு உச்சநீதிமன்றமும் முன்ஜாமீன் வழங்கவில்லை. இதையடுத்து, அவர் போலீஸில் சரண்டைகிறார்.
கொச்சியை சேர்ந்த ரெஹானா பாத்திமா, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணி புரிந்தார். 2018- ம் ஆண்டு சபரிமலை செல்ல முயன்று சர்ச்சையில் சிக்கினார். ஃபேஸ்புக்கில் சபரிமலை ஐயப்பன் குறித்து ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்களை வெளியிட்டதால், போலீஸ் வழக்குப்பதிவு செய்தது . இதையடுத்து , மத துவேசத்தில் ஈடுபட்டதாக ரெஹானா பாத்திமாவை பி.எஸ்.என்.எல் நிறுவனம் டிஸ்மிஸ் செய்தது-
இந்த நிலையில் ,பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் குடியிருப்பில் வசித்து வந்த ரெஹானா தன் அரை நிர்வாண உடல் மீது தன்னுடைய மைனர் மகள் மற்றும் மகனை ஓவியம் வரைவது போல வடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது . இதனால், முன்ஜாமீன் கோரி ஜூலை 24- ந் தேதி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தன் பிள்ளைகளுக்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த செயலில் ஈடுபட்டதாக அவரின் தரப்பில் காரணம் சொல்லப்பட்டது ஆனால், கேரள உயர்நீதிமன்றம் ஜாமீன் அளிக்க மறுத்து விட்டது.
பின்னர், உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு செய்தார். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர்.காவை மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அம்ர்வு முன் விசாரணைக்கு வந்தது. ஆனால், உச்சநீதிமன்றமும் ரெஹானவுக்கு ஜாமீன் அளிக்க மறுத்துவிட்டது. மேலும் நீதிபதிகள், '' இத்தகைய மோசமான சிந்தனையை யோசித்து கூட பார்க்க முடியவில்லை.. மனுதாரர் சமூகச் செயற்பாட்டாளராக இருக்கலாம். அதற்காக, இது போன்ற ரசனை குறைந்த செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த தேசத்தின் உயர்ந்த கலாச்சாரம் குறித்து அவரின் உடலில் ஓவியம் வரைய வைப்பதன் மூலம் குழந்தைகளுக்கு எந்த விஷயத்தை கற்றுக்கொடுக்கப் போகிறார் . மனுவின் அனைத்து அம்சங்களையும் உயர் நீதிமன்றம் விரிவாகப் பரிசீலித்து ஜாமீன் அளிக்க மறுத்துள்ளது ஆதலால், நாங்களும் மனுவைத் தள்ளுபடி செய்கிறோம்” எனத் தெரிவித்தனர்.
உச்சநீதிமன்றமும் முன்ஜாமீன் அளிக்க மறுத்துள்ளதால் தற்போது டெல்லியிலுள்ள ரெஹானா வேறு வழியில்லாமல் போலீஸில் சரண்டராக முடிவு செய்துள்ளார். ஆகஸ்ட் 8- ந் தேதி டெல்லியிலிருந்து கொச்சி வரும் அவர் திங்கள் கிழமை போலீஸில் சரண் அடைய முடிவு செய்துள்ளதாக ரெஹானாவின் கணவர் மனோஜ் தெரிவித்துள்ளார்.