கடந்த 2009 ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் பிலாட்டஸ்-பிசி 7 பயிற்சி விமானங்களை விமானப்படைக்கு வாங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறப்படுவது குறித்து, 14 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
75 பிலாட்டஸ் பயிற்சி விமானங்களை 2 ஆயிரத்து 893 கோடி ரூபாய் செலவில் சுவிஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்க 2009 டிசம்பர் 16 ஆம் தேதி விமானப்படை கொள்முதல் உத்தரவு பிறப்பித்தது. இதற்காக ராணுவ கொள்முதல் விதிகள் மீறப்பட்டு பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் விமானப்படை அதிகாரிகள் சிலருக்கு 339 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக, சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு பினாமி பெயரில் லண்டனில் பங்களா வாங்கி கொடுத்ததாக சஞ்சய் பண்டாரி, பிலாட்டஸ் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது அமலாக்கப்பிரிவு சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் சஞ்சய் பண்டாரி தொடர்புடைய டெல்லியில் 12 இடங்கள், குருகிராம் மற்றும் சூரத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்துகின்றனர்.