ராணுவத்தில் தற்காலிகமாகப் பணியாற்றி வரும் பெண் அதிகாரிகளை நிரந்தரமாக்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், நிரந்தரப் பணி விவகாரம் தொடர்பாக பெண் அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என்றும் அவர்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க இந்த மாத இறுதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்கள் சிறப்பு பணித் திட்டம், குறுகிய கால சேவை ஆணையம் ஆகியவற்றின் மூலமாக பணியில் அமர்த்தப்பட்ட பெண் அதிகாரிகளுக்கு நிரந்தரப் பணி வழங்கப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராணுவத்தில் உள்ள தொழில்நுட்பப் பிரிவு, பொறியியல் பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு, சேவைகள் உள்ளிட்ட 10 பிரிவுகளில் பணியாற்றி வரும் தற்காலிகப் பெண் அதிகாரிகள் அனைவரும் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.