ஜம்மு காஷ்மீரின் செனாப் (CHENAB) நதியின் மீது கட்டப்பட்டு வரும் உலகின் மிக உயரமான ரயில்வே மேம்பாலப் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையும் என்றும் 2022 டிசம்பருக்குள் ரயில் போக்குவரத்து துவங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற மாநிலங்களுடன் இணைக்கும் இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த 2002ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டன.
பின் பாதுகாப்பு காரணங்களுக்காக 2008ல் நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் துவங்கப்பட்டு, பிரதமர் அலுவலகத்தின் நேரடிப் பார்வையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
செனாப் நதியில் இருந்து 359 மீட்டர் உயரத்தில் அமையும் இந்த பாலம் குண்டு வெடிப்பு, 8 ரிக்டர் அளவிற்கான நிலநடுக்கம், 260 கி.மீ. வேக புயல் உள்ளிட்டவற்றை தாங்கும் திறன் கொண்டது என்கின்றனர் வல்லுநர்கள்.
பாலம் பயன்பாட்டுக்கு வரும்போது பிரான்சின் 'ஈபிள்' கோபுரத்தை விடவும், சீனாவின் ஷூபி ரயில் மேம்பாலத்தை விடவும் உயரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.