இந்திய அரசு வெளியிடும் தங்கப்பத்திர முதலீட்டுத் திட்டத்தில் பொதுமக்கள் திங்கள் முதல் வெள்ளி வரை முதலீடு செய்யலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஒரு கிராம் ஐயாயிரத்து 334 ரூபாய் என்கிற விலையில் இந்திய அரசின் தங்கப் பத்திரத்தை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. இதற்காக இணையத்தளத்தில் விண்ணப்பித்து, இணைய வழியாகவே பணத்தைச் செலுத்துவோருக்கு ஒரு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.
தங்கப்பத்திரத்தில் செய்யும் முதலீட்டுக்கு ஆண்டுக்கு இரண்டரை விழுக்காடு வட்டி வழங்கப்படுவதுடன், முதிர்வுத் தொகைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தங்கப் பத்திரம் பெற ஆகஸ்டு 3 முதல் 7 வரை இணையத்தில் பதிவு செய்யலாம்.
ஆகஸ்டு 11ஆம் தேதி பத்திரம் வழங்கப்படும். குறைந்தது ஒரு கிராம் முதல் அதன் மடங்குகளில் முதலீடு செய்யலாம். இந்தப் பத்திரத்தின் முதிர்வுக் காலம் எட்டாண்டுகள் எனினும் ஐந்தாண்டுக்குப் பிறகு விரும்பினால் முதலீட்டைத் திரும்பப் பெறலாம். வங்கிகள், குறிப்பிடத் தக்க அஞ்சலகங்கள் ஆகியவற்றிலும் தங்கப்பத்திரங்களை வாங்கிக் கொள்ளலாம். முதலீட்டைத் திரும்பப் பெறும் நாளில் உள்ள விலையில் முதிர்வுத் தொகையைப் பெறலாம்.