இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் இடையிலான ஐந்தாம் சுற்றுப் பேச்சுவார்த்தையில், கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து சீனப் படையினரை விலக்கிக் கொள்ள இந்தியா வலியுறுத்தியுள்ளது.
கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீனாவும் இந்தியாவும் படைவீரர்களைக் குவித்ததால் பதற்றம் நிலவியது. ஜூன் 15ஆம் தேதி இருநாட்டுப் படையினரும் மோதிக்கொண்டதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிர் தியாகம் செய்தனர்.
எல்லையில் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் ஜூன் 6, 22, 30, ஜூலை 14 ஆகிய நாட்களில் ராணுவ அதிகாரிகள் நிலையிலான பேச்சுக்கள் நடைபெற்றன. இதில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் முன்பிருந்த நிலையைப் பராமரிக்க முடிவெடுக்கப்பட்டது.
இருப்பினும் சீனப் படையினரின் நடமாட்டம் எல்லையில் தொடர்ந்து நீடிக்கிறது. இந்நிலையில் இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் இடையிலான ஐந்தாம் சுற்றுப் பேச்சு சீனப் பகுதியில் உள்ள மோல்டோ என்னுமிடத்தில் நடைபெற்றது. இதில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து சீனப் படைகளை முற்றாக விலக்கிக் கொள்ள இந்தியா வலியுறுத்தி உள்ளது.
கால்வனில் இருந்து சீனப் படையை விலக்கிக் கொண்டதாகக் கூறப்பட்டாலும், உத்தரக்கண்ட் மாநிலத்தின் லிபுலேக் கணவாய்ப் பாதை அருகே எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஆயிரம் வீரர்களைச் சீனா நிறுத்தியுள்ளது.
இதேபோல் சிக்கிம், அருணாசலப் பிரதேசத்தை ஒட்டிய பகுதிகளிலும் சீனா படைவலிமையை அதிகரித்து வருகிறது. இந்தியாவும் சியாச்சினில் உள்ளதைப்போல் கிழக்கு லடாக்கில் ராணுவ வீரர்களுக்குப் பனிக் கூடாரங்கள் அமைக்கவும், குளிரைத் தாங்கும் உடைகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத் தக்கது.