உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலின் பூமி பூஜை நிகழ்ச்சிகள், நாளை முதல் தொடங்க உள்ள நிலையில் நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நிகழ்ச்சிகள் நாளை தொடங்கி வரும் 5-ம் தேதி வரையில் நடைபெற உள்ளன. நிகழ்ச்சியின் இறுதி நாளில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட, பல மாநில முதலமைச்சர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் உடன் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டு வருகிறது.
பூமி பூஜை நிகழ்ச்சி தொடர்பான ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று அயோத்தி வரும் நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பூமி பூஜை நடைபெறும் தினத்தன்று விளக்கேற்றுவதற்காக சுமார் ஒன்றே கால் லட்சம் அகல் விளக்குகள் ஆர்டர் செய்யப் பட்டிருப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முதலே நகரம் முழுவதும் விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. அயோத்தியின் முக்கிய சாலைகள், கோவில்கள், புனித தலங்கள் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளில் வண்ணமயமான விளக்குகள் ஒளிரவிடப்பட்டுள்ளன. சரயு நதிக்கரை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு நேரத்தில் ஜொலிக்க, ஏராளமான பக்தர்களுடன் ஆரத்தி வழிபாடு களைகட்டியது.