ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020 ஆன்லைன் போட்டியில் பங்கேற்றுள்ள கோவை மாணவர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார். நாட்டில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு கணினி தொழில்நுட்ப ரீதியிலான புதிய கண்டுபிடிப்புகளை அடையாளம் காணும் முயற்சியே ஹேக்கத்தான் போட்டிகள் எனப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020 போட்டியின் இறுதிச்சுற்று ஆகஸ்ட் ஒன்று முதல் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்தப் போட்டி கோவை கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் துவங்கியது. இதில் அக்கல்லூரியைச் சேர்ந்த ஸ்வேதா என்ற மாணவியுடன் உரையாடிய பிரதமர், வெள்ளப்பெருக்கு காலங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அவரது குழுவின் மென்பொருள் குறித்து கேட்டறிந்தார். அதேபோல் பி.எஸ்.ஜி கல்லூரி மாணவர் குந்தன் தலைமையிலான குழு வடிவமைத்துள்ள காவல்துறை சார்ந்த மென்பொருள் குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார்.