முதல் கட்டமாக 5 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்துள்ள நிலையில், ரபேல் போர் விமானங்களின் சிறப்புகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
ரபேல் போர் விமானங்கள் நான்காம் தலைமுறையைச் சேர்ந்தவை. இரண்டு என்ஜின்கள் மூலம் இயங்கும் தன்மை கொண்டது. மணிக்கு அதிகபட்சமாக 2222 கிலோ மீட்டர் வேகத்தில் 50 ஆயிரம் அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது. 10.3 மீட்டர் நீளம் கொண்ட இந்த விமானம், அதிகபட்சமாக 24,500 கிலோ எடை கொண்டது. 9500 கிலோ எடை வரை ஆயுதங்களை சுமந்து செல்லும் வல்லமை கொண்டது.
மிக கடும் குளிர் மற்றும் அதிக உயரமான இடங்களில் இருந்தும் விமானத்தை மேலெப்புவதற்கேற்ற சிறப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்முனைத் தன்மை கொண்ட ரேடார் வசதி இருப்பதால் 100 கிலோ மீட்டர் தூரம் வரை ஒரே நேரத்தில் 40 இலக்குகளை கண்டறிந்து தாக்க இயலும். 600 கிலோ மீட்டர் தூரம் வரையிலான எதிரிகளின் இலக்கை தாக்க, எல்லை தாண்டிச் சென்று ரிஸ்க் எடுக்க வேண்டிய அவசியம் நமது விமானிகளுக்கு இனி இருக்காது. எதிரிகளின் ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்புவதற்கான ரேடார் எச்சரிக்கையை பெறும் வசதியும் அதில் உள்ளது.
வானில் இருந்து வானுக்கும், வானில் இருந்து தரைக்கும் தாக்குதல் நடத்தும் வல்லமை பெற்றது ரபேல் போர் விமானங்கள். ரஃபேல் போர் விமானங்கள் பறக்கும் கம்ப்யூட்டர் என்று வர்ணிக்கப்படுகின்றன. ஹெல்மெட் மவுன்டட் லைட், ரேடார் எச்சரிக்கை கருவிகள், பறத்தல் தொடர்பான விவரங்களை 10 மணி நேரம் வரை சேமிக்கும் வசதி ரபேல் விமானத்தில் உள்ளது. ஜாம்மர்கள், இன்ஃப்ரா ரெட் டிராக் சிஸ்டம்ஸ், கோல்டு எஞ்சின் ஸ்டார்ட் வசதியும் கொண்டுள்ளது.
பிரான்ஸ்,எகிப்து, கத்தார் ஆகியவற்றை தொடர்ந்து ரபேலை வைத்துள்ள 4 ஆவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அணு ஆயுதங்களை செலுத்தி எதிரிகளை வீழ்த்த முடியும். ரபேல் விமானத்தில் தரையில் 300 கிலோ மீட்டர் தூர இலக்கை தாக்கும் ஸ்கேல்ப் ஏவுகணை, வானில் இருந்து வானில் 150 கிலோ மீட்டர் வரை உள்ள இலக்கை தாக்கும் மெடியர் ஏவுகணைகளும் பொருத்தப்படுகின்றன.
இது தவிர 70 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று பதுங்கு குழிகள், வலிமையான தங்கும் இடங்களை அழிக்கும் ஹம்மர் ஏவுகணைகளும் ரபேல் போர் விமானத்தில் இணைக்கப்பட உள்ளது. உலகின் மிகச்சிறந்த உளவு விமானங்களில் ஒன்றாகவும் ரஃபேல் கருதப்படுகிறது. நிலையான இலக்கு மட்டும் அல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கும் இலக்கையும் ரஃபேலால் துல்லியமாக தாக்க முடியும்.
சீனாவின் சுகோய் 35s போர் விமானங்களை விட ரஃபேல் விமானங்களில் கூடுதலாக ஆயுதங்களை இருப்பு வைக்க முடியும். 50 ஆண்டுகள் வரை பிரான்ஸ் அரசு தொழில் முறையிலான ஆதரவு வழங்க ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.