இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் சீனக் கப்பல்களின் மீதான கண்காணிப்பை இந்தியக் கடற்படை தீவிரப்படுத்தியுள்ளது.
மாலத்தீவுகள், மொரீசியஸ், சீசெல்ஸ், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் தனது கடற்படைத் தளங்களை நிறுவச் சீனா முயன்று வருகிறது. இதைத் தடுப்பதற்காக அந்த நாடுகளுடன் இந்தியா பேச்சு நடத்தி வருவதாகக் கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலகின் வல்லரசு என்பதை மெய்ப்பிக்க இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் தனது மேலாண்மையைச் சீனா நிறுவ முயற்சித்து வருகிறது.
சீனாவுக்கு வரும் எண்ணெய்க் கப்பல்களில் 80 விழுக்காடு இந்தியப் பெருங்கடல் வழியாக வந்து மலாக்கா நீரிணையைக் கடந்து தென்சீனக் கடல்பகுதிக்குச் செல்கின்றன.
இவற்றை கண்காணிக்க இந்தியக் கடற்படைக் கப்பல்களின் ரோந்தை அதிகப்படுத்தியுள்ளது. அமெரிக்கக் கடற்படையுடன் இணைந்தும், ஜப்பான் கடற்படையினருடன் இணைந்தும் இந்தியக் கடற்படை நடத்திய கூட்டுப் போர்ப் பயிற்சி இதன் ஒரு பகுதி எனக் கூறப்படுகிறது.