இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் உயிரிழப்பு விகிதம் இரண்டே கால் விழுக்காடாகக் குறைந்துள்ளதாகவும், 64 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளதாகவும் மத்திய நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜூன் மாத நடுவில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு விகிதம் 3 புள்ளி மூன்று மூன்று விழுக்காடாக இருந்ததாகவும், இப்போது இரண்டே கால் விழுக்காடாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதேபோல் ஜூன் மாத நடுவில் 53 விழுக்காடாக இருந்த குணமடைந்தோர் விகிதம், இப்போது 64 விழுக்காடாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. செவ்வாய் காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35 ஆயிரத்து 176 பேர் குணமடைந்துள்ளதாகவும், மொத்தமாகக் குணமடைந்தோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 52 ஆயிரத்து 743 ஆக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.