கிழக்கு லடாக் எல்லையில் மோதல் போக்கு ஏற்பட்ட பெரும்பாலான இடங்களில் முன்வரிசைப் படைகளை விலக்கிக் கொண்டுவிட்டதாக சீனா தெரிவித்துள்ளது.
இந்தியா-சீனா எல்லைத் தகராறு தொடர்பான இருதரப்பு பேச்சுவார்த்தைக் குழு, கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து சுமார் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தியது.
இந்நிலையில், கால்வன் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா பகுதிகளில் இந்தியா-சீனா படைகளை விலக்கிக் கொள்ளும் செயல்முறை முடிவுக்கு வந்துவிட்டதா என சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
பெரும்பாலான பகுதிகளில் படை விலக்கம் முடிந்துவிட்டதாக வாங் வென்பின் பதிலளித்தார். அங்கு பதற்றம் தணிந்து களநிலவரம் இயல்பாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மீதமுள்ள பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு, ராணுவ படைப்பிரிவு தளபதிகள் நிலையில் 5ஆம் கட்ட பேச்சுக்கு ஆயத்தமாகி வருவதாகவும் வாங் வென்பின் தெரிவித்தார்.