சீன நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கிடைக்கக் கூடிய டெண்டர்களை மட்டும் மத்திய அரசு ரத்து செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லையில் அத்துமீறும் சீனாவிற்கு பொருளாதார ரீதியிலும் பதிலடி கொடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மத்திய அரசின் டெண்டர்களை, சீன நிறுவனங்கள் எடுப்பதை தடை செய்யும் நோக்கில், தொழில்துறையிடம் பதிவு செய்து கொண்டிருந்தால் மட்டுமே டெண்டரில் பங்கேற்க முடியும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, அதில் சீன நிறுவனங்கள் பங்கேற்றிருந்தாலும் ரத்து செய்யப்படுமா என கேள்வி எழுந்தது. இவ்வாறு செய்வது திட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுத்தும் என்பதால், சீன நிறுவனங்கள் பங்கேற்றதற்காகவே டெண்டர்கள் ரத்து செய்யப்படாது என்றும், ஒப்பந்தம் சீன நிறுவனங்களுக்கு கிடைக்கும் நிலை இருந்தால் மட்டுமே ரத்து செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.