கடந்த ஜூன் மாதத்தில் தடை செய்யப்பட்ட 59 சீன நாட்டு செயலிகளின் குளோனிங்காக விளங்கிய 47 சீன செயலிகளுக்குத் தடை விதித்துள்ளது மத்திய அரசு. மேலும், 275 செயலிகள் மத்திய அரசின் தீவிரக் கண்காணிப்பில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகக் கூறி TikTok, SHAREit, UC Browser, CamScanner, Helo, WeChat உள்ளிட்ட 59 சீன செயலிகளைத் தடை விதித்தது மத்திய அரசு. இதைத் தொடர்ந்து மேலும் பல செயலிகள் தடை செய்யப்படலாம் எனும் தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் தான் தடை செய்யப்பட்ட செயலிகளின் குளோன் (ஒரிஜினல் செயலிகளைப் போலவே இயங்கும் போலி செயலிகள்) ஆக இயங்கிய 47 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்தப் பட்டியலில் மேலும் 275 செயலிகள் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது 275 செயலிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் தரவுகளைத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் பாதுகாப்புத் துறை தீவிரமாக ஆய்வு செய்துவருகிறது.
சீனாவின் பிரபல விளையாட்டான பப்ஜி, சுடோகு மற்றும் சியோமி நிறுவனங்களின் செயலிகள் மட்டுமல்லாமல் மெய்டு, பெர்பெக்ட் கார்ப் உள்ளிட்ட நிறுவனங்களின் செயலிகளும் தடை செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வமாக என்னென்ன செயலிகள் தடை செய்யப்படும் என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை!