மும்பை, கொல்கத்தா, நொய்டாவில் அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையமான ஐ.சி.எம்.ஆர்., மகாராஷ்டிராவில் மும்பை, மேற்குவங்காளத்தில் கொல்கத்தா மற்றும் உத்தரபிரதேசத்தில் நொய்டா ஆகிய 3 இடங்களில் அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்களை அமைத்துள்ளது.
கொரோனா பரிசோதனை திறனை அதிகரிக்கவும், நோயை ஆரம்பத்திலேயே கண்டறியவும் வகையில் புதிய வசதி இந்த ஆய்வகங்களில் அமைக்கப்பட்டுள்ளது. உயர் பரிசோதனை வசதியால் தினமும் 10 ஆயிரம் மாதிரிகளை பரிசோதிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பரிசோதனை மையங்கள் மூலம் கொரொனா தொற்று காலத்திற்குப் பின் டெங்கு, காசநோய் உள்ளிட்டவற்றுக்கான சோதனையும் மேற்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.