கண்களில் ஏற்படும் பாதிப்புகள் கூட கொரோனா வைரஸ் தாக்கமாக இருக்கலாம் என மருத்துவத் துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் இதுதொடர்பாக டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையின் கண் துறை மூத்த மருத்துவர் பங்கஜ் ரஞ்சன் கருததரங்கில் பேசும்போது, தற்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் அதிக கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.
கொரோனா வைரஸ் வாய், மூக்கு மட்டுமன்றி கண்கள் வழியாகவும் பரவுவதாக அவர் தெரிவித்தார். கண்கள் சூடான தன்மையை உணர்தல், சிவந்து இருத்தல், கடுமையான எரிச்சல், தொடர்ந்து கண்ணீர் வடிதல், பிசுபிசுப்பு தன்மை மற்றும் கண்களில் கூச்சம் ஆகியவை அதிகம் இருந்தால் அது கொரோனா வைரசின் அறிகுறிகளாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மற்றவர்களிடமிருந்து தனித்து இருக்குமாறு கேட்டுக் கொண்ட அவர், மருத்துவரைக் கலந்தாலோசிக்காமல் கண்களுக்கு சுயமாக மருந்துகள் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.