ஆந்திராவில் வெவ்வேறு பெயர்களில் மூன்று ஆண்களைத் திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை போலிசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திரப் பிரதேச மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சநேயலு. இவர் டென்மார்க் நாட்டில் சாஃப்ட்வேர் இன்ஜினியராகப் பணிபுரிந்து வருகிறார். மேட்ரிமோனி இணைய தளத்தின் வாயிலாகத் திருப்பதியைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சொப்னா எனும் பெண்ணைச் சந்தித்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்துகொண்டார்.
ஆஞ்சநேயலுவின் வீடு
திருமணத்துக்குப் பிறகு ஆஞ்சநேயலுவும் சொப்னாவும் ஹைதராபாத்தில் மூன்று மாதங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். விடுமுறை முடிந்தது, ஆஞ்சநேயலு தன் மனைவி சொப்னாவை டென்மார்க்குக்கு அழைத்துள்ளார். ஆனால், சொப்னாவோ எனக்கு வேலைதான் முக்கியம் என்று கூறி டென்மார்க்குக்கு வர மறுத்து ஹைதராபாத்திலேயே தங்கிவிட்டார். மனைவியுடன் டென்மார்க்குக்குப் பறக்க ஆசைப்பட்ட ஆஞ்சநேயலு, சோகத்துடன் தனியாகப் புறப்பட்டுச் சென்றார்.
அதன்பிறகு, பிரகாசம் மாவட்டத்துக்கு வந்த சொப்னா தன் மாமனார் மாமியாரிடம், “உங்கள் மகன் என்னை ஏமாற்றிவிட்டார். எனக்கு நஷ்ட ஈடாகப் பணம் கொடுங்கள். இல்லையேல் நடப்பதே வேறு” என்று மிரட்டியுள்ளார். மருமகளை எப்படியாவது சமாதானப்படுத்திவிடலாம் என்று நினைத்த ஆஞ்சநேயலுவின் பெற்றோர் பேசி பார்த்தனர். ஆனால், சொப்னாவோ அடங்குவதாக இல்லை. பிரச்னை பெரிதாகியது!
ஒரு கட்டத்தில், சொப்னாவின் டார்ச்சரைத் தாங்கமுடியாத ஆஞ்சநேயலுவின் பெற்றோர் டோணகொண்டா காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்தப் புகாரைப் பதிவு செய்துகொண்ட போலிசார் விசாரித்த போதுதான் சொப்னா ஐபிஎஸ் இல்லை எனும் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியது.
அதன்பிறகு வெளியான தகவல்கள் அனைத்தும் பகீர் ரகம். சொப்னா எனும் பெயர் கூட போலியானது என்பது தெரிய வந்தது. ரம்யா எனும் இயற்பெயர் கொண்ட சொப்னா இதற்கு முன்பு சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரித்விராஜ் என்பவரையும் ஆத்மகூரைச் சேர்ந்த சுதாகர் என்பவரையும் வெவ்வேறு பெயர்களில் திருமணம் செய்து, பணம் பறித்து ஏமாற்றியுள்ளார். அந்தப் பெண்ணின் பண வேட்டையில் மூன்றாவதாகச் சிக்கியவர் தான் ஆஞ்சநேயலு. மூன்று பேரை ஏமாற்றிய பெண்ணைப் போலிசார் கைது செய்த போதுதான் அந்தப் பெண் இப்போது மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, அந்தப் பெண்ணைக் காப்பகத்தில் சேர்த்துவிட்டு, வேறு யாராவது பாதிக்கப்பட்டுள்ளனரா என்று விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர் போலிசார்.
இதற்கிடையே, ஆஞ்சநேயலுவின் பெற்றோர், “அந்தப் பெண்ணிடம் இருந்து எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள். உங்களுக்குப் புண்ணியமாகப் போகும்” என்று கலங்கியபடி போலிசாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.