இந்தியாவில் பிரபல பன்னாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனமான சிப்லா, கொரோனா நோய் சிகிச்சைக்காகத் தயாரித்துள்ள ‘சிப்லென்ஸ்’ எனும் மாத்திரைக்கு இந்திய அரசின் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாடு அமைப்பிடம் அனுமதி பெற்றுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் ரூ.68 க்கு ஒரு மாத்திரை விற்பனை செய்யப்படும் என்று சிப்லா நிறுவனம் அறிவித்துள்ளது.
சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவி கடுமையான விளைவுகளை ஏற்படுத்திவருகிறது கொரோனா நோய்த் தொற்று. இந்தியாவில் மட்டும் சுமார் 14 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் குணமாகியுள்ளனர். கொரோனாவுக்கு எனத் தனிப்பட்ட சிகிச்சை மருந்துகள் உருவாக்கப்படவில்லை என்றாலும் இன்ஃப்ளூயன்ஸாவுக்கு அளிக்கப்படும் ஃபவிபிராவிர் எனும் மருந்து பரவலாக அளிக்கப்படுகிறது. கொரோனா, சாதாரண பாதிப்பிலிருந்து மிதமான பாதிப்பு கொண்டவர்களுக்கு ஃபவிபிராவிர் மாத்திரை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் இந்த மாத்திரையைத் தயாரிக்க சிப்லா நிறுவனம் அனுமதி பெற்றது.
சிப்லா நிறுவனம் இந்த மருந்தை, ‘சிப்லென்ஸா’ எனும் பெயரில் இந்தியாவில் தயாரித்து இந்திய மருத்துகள் தரக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் அனுமதி பெற்றுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் ஒரு மாத்திரை ரூ.68 க்கு விற்பனை செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது சிப்லா நிறுவனம்.
இது குறித்து, ”கொரோனா நோயாளிகள் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து மாத்திரைகள் விநியோகிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் அனைவருக்கும் மருந்து கிடைக்கும் வகையில் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் மூலம் மாத்திரைகள் விரைவாக வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளது சிப்லா நிறுவனம்.