ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே, பணம் இல்லாததாதல் மாடுகளுக்குப் பதில் கலப்பை நுகத்தடியில் தனது மகள்களைப் பூட்டி நிலத்தை உழுதுள்ளார் விவசாயி ஒருவர்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி அருகேயுள்ளது கே.வி புரம் கிராமம். இந்தக் கிராமத்தில் வசிக்கும் நாகேஸ்வர ராவ் என்பவர் விவசாயம் பார்த்தபடியே இருபது வருடங்களாக மதனப்பள்ளியில் டீ விற்றுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாகத் தொழிலில் நஷ்டம் அடைந்து சொந்த கிராமத்துக்கு வந்துவிட்டார். அங்கு தனது நிலத்தில் தக்காளியைப் பயிரிட்டிருந்தார். விளைச்சல் நல்ல முறையிலிருந்தும் தக்காளிக்கு சரியான விலை கிடைக்கவில்லை. மேலும், கொரோனா ஊரடங்கு காரணமாக வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க முடியாததால் பெருமளவுக்கு நஷ்டம் அடைந்துள்ளார். ஏற்கெனவே கடன் வாங்கி விவசாயம் செய்தவரின் நிலைமையை கொரோனா மேலும் மோசமாக்கியது.
இந்த நிலையில் தான் நிலத்தை உழக்கூட கையில் பணம் இல்லாத நாகேஸ்வர ராவ், தனது இரண்டு மகள்களையும் மாட்டுக்குப் பதில் ஏர் கலப்பையில் பூட்டி நிலத்தை உழுதுள்ளார். இவர்களில் மூத்த மகள் பன்னிரண்டாவதும் இளைய மகள் பத்தாவதும் முடித்துள்ளார்.
மகள்களைக்கொண்டு நிலத்தை உழுதது குறித்து நாகேஸ்வர ராவ், “இருபது வருசமா நானு டீக்கடை வச்சி பொழுப்பு நடத்துனேன். கொரோனாவால நஷ்டமாகிடுச்சி. நிலத்துல போட்டுருந்த தக்காளியும் நஷ்டம் ஆகிடுச்சு. கைல காசு இல்ல. டிராக்டர கூப்டோ அல்லது கூலி ஆள வச்சோ என்னால இப்போ நிலத்த உழ முடியாத சூழல்ல இருக்கேன். என்னோட கஷ்டத்த புரிஞ்சிகிட்டு என்னோட மகளுங்க எனக்கு உதவி பன்னுனாங்க. என்னோட நிலம் எனக்கு தாயி மாதிரி. அது என்ன கைவிடாது” என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
ஏர் கலப்பையை நாகேஸ்வர ராவ் பிடித்துக்கொள்ள, நுகத்தடியைப் பிடித்துக்கொண்டு மகள்கள் இரண்டு பேரும் செல்கிறார்கள். நாகேஸ்வர ராவின் மனைவி விதை விதைத்தபடி ஏரைப் பின்தொடர்கிறார். வயதுக்கு வந்த மகள்களைக்கொண்டு விவசாயி நிலத்தை உழுத சம்பவம் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது!