அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆகஸ்ட் 5ஆம் தேதி பூமி பூஜை, அடிக்கல் நாட்டப்பட உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேரில் ஆய்வு செய்தார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகளை நிர்வகிக்க, 15 உறுப்பினர்களைக் கொண்ட, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது.
இந்த அறக்கட்டளையின் மேற்பார்வையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா, அயோத்தியில் வரும்5ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்ட உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பேரிடரை கருத்தில் கொண்டு, இந்த விழாவில் நேரடியாக பங்கேற்க 200 பேருக்கு மட்டும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வனவாசம் முடித்து திரும்பிய ராமருக்கு வரவேற்பு அளித்ததை நினைவூட்டும் வகையில், பூமி பூஜை நாளில் அயோத்தியில் உள்ள கோவில்களில் தீபங்கள் ஏற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அயோத்தி சென்ற உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினருடன் ஆலோசனை நடத்தினார். பூமி பூஜைக்கான ஏற்பாடுகள் குறித்து அப்போது அவர் ஆய்வு செய்தார்.
முன்னதாக, ராமஜென்ம பூமி தளத்திற்கு சென்று, ராமரை வழிபட்ட யோகி ஆதித்யநாத், அனுமன் கோவிலுக்கும் சென்று வழிபட்டார்.