நெருக்கடி கொடுத்து காரியம் சாதிக்கும் அரசியல் தம்மிடம் செல்லாது என்று ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா கூறியுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு யாருமே கேட்காதபோது, பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முதலமைச்சர் அசோக் கெலாட் இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன் என்றும் அவர் வியப்பு தெரிவித்துள்ளார்.
ஆளுநர் மாளிகையில் காங்கிரஸ் நடத்திய எம்எல்ஏக்கள் முற்றுகைப் போராட்டத்திற்கு முதலமைச்சர் பொறுப்பு அல்ல என்றால், மாநில அரசால் ஆளுநரைப் பாதுகாக்க முடியவில்லையா என கல்ராஜ் மிஸ்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதைக் குறிப்பிட்டு முதலமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் பெருந்தொற்று காலத்தில் அவசரமாக சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவையை கூட்டுமாறு அமைச்சரவை அனுப்பிய பரிந்துரை குறிப்பில், தேதியோ, நிகழ்ச்சி நிரலோ, முறையான அமைச்சரவை ஒப்புதலோ இல்லை என சுட்டிக்காட்டியுள்ள ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை அமர்வை கூட்ட 21 நாள் நோட்டீஸ் தேவை என்ற விதியையும் குறிப்பிட்டுள்ளது.
அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்றால், சட்டப்பேரவையை கூட்டி அதை நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் ஆளுநர் மாளிகை கேள்வி எழுப்பியுள்ளது.