இந்தியாவின் 6 நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் கோவாக்சின் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு சோதிக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில், தேசிய வைராலஜி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவாக்சின், இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடமிருந்து மனித பரிசோதனைகளுக்கான அனுமதியை பெற்றுள்ளது.
இதையடுத்து, நாக்புர், புவனேசுவர், கான்புர், கோவா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 11 நகரங்களில் உள்ள 12 மருத்துவமனைகளில் மனிதர்களிடம் பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. 500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இதற்காக பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே, தமிழகத்தில் எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மற்றும் ரோட்டக், ஹைதராபாத், பாட்னா,பெல்காம் ஆகிய நகரங்களின் சோதனை தொடங்கிய நிலையில், டெல்லியிலும் நேற்று பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது.
தடுப்பு மருந்து வந்ததும் மூன்று மருத்துவமனைகளில் சோதனை தொடங்கப்படும். ஆந்திராவில் உள்ள ஒரு மருத்துவமனை ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
இதனிடையே, டெல்லியைச் சேர்ந்த 30 வயது நபருக்கு நேற்று ஏய்ம்ஸ் மருத்துவமனயில் பரிசோதனை நடைபெற்றது.அவரை இரண்டு மணி நேரம் கண்காணித்ததில் எந்த வித பாதிப்பும் இல்லை என்று ஏய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரை வீட்டுக்குச் செல்ல அனுமதித்த மருத்துவர்கள் இரண்டு நாட்களுக்குப் பின்னர் மீண்டும் சோதனைக்கு அழைத்துள்ளனர்.
பாரத் பயோடெக், zydus cadila ஆகிய நிறுவனங்கள் தவிர, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து சோதனையும் இந்தியாவில் விரைவில் நடைபெற உள்ளது.
இதனிடையே, கொரோனாவுக்கு அளிக்கப்படும் மாத்திரையான பெவிபிரவிர் (favipiravir) விலை கடந்த ஒருமாத காலத்தில் 40 சதவீத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் மேலும் சில நிறுவனங்களுக்கு இந்த மருந்தைத் தயாரிக்க அனுமதியளித்துள்ளதால், இதன் சந்தை விலை மேலும் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.