கேரள தங்க கடத்தல் வழக்கின் விசாரணையில் திருச்சியில் உள்ள நகை கடைக்கு கடத்தல் தங்கத்தை விற்று வந்ததாக தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து, ஜூவல்லரி உரிமையாளரிடம் விசாரணை நடத்த என்ஐஏ திட்டமிட்டுள்ளது.
ஐக்கிய அமீரக தூதரகத்தின் பெயரில் 30 கிலோ தங்கம் கடத்திய வழக்கில் சுவப்னா சுரேஷ் அவரது கூட்டாளிகள் ரமீஸ், சந்தீப் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கை ஒருபக்கம் என்.ஐ.ஏ, ஒரு பக்கம் சுங்க துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. சுவப்னா சுரேஷின் கூட்டாளி ரமீஸை சுங்கத் துறை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.
முன்பு கடத்தப்பட்ட தங்கம் திருச்சியில் உள்ள பிரபல நகை கடைக்கும், மகாராஷ்டிராவில் ஷாங்கிலி எனும் பகுதிக்கும் விற்கப்பட்டதாக ரமீஸ் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் கேரளா வழியாக கடத்தப்படும் தங்கம், திருச்சி குஜிலி தெரு வியாபாரிகள் மூலம் திருச்சியில் உள்ள பிரபல நகை கடைக்கும், மகாராஷ்டிரா சங்கிலி பகுதிக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, தங்கம் கடத்தலில் சம்மந்தப்பட்ட திருச்சி நகை கடையில் சோதனை நடத்தவும், நகை கடை உரிமையாரை விசாரிக்க சம்மன் அனுப்பவும் என்.ஐ.ஏ அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
தங்க கடத்தல் விவகாரத்தில் சுவப்னா சுரேஷூடன் உள்ள தொடர்பு குறித்து, கேரள முதலமைச்சரின், முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரனிடம் விசாரணை நடத்தியுள்ள என்.ஐ.ஏ, கேரள முதலமைச்சர் அலுவலகத்தின் சிசிடிவி காமிரா பதிவுகளை கேட்டு கடிதம் அனுப்பியுள்ளனர். கேரள முதலமைச்சரின் அலுவலகம் அருகே, சிவகங்கரின் அலுவலகமும், அதற்கு அடுத்து சுவப்னா சுரேஷ் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்த ஐடி துறை அலுவலகமும் அமைந்துள்ளது. எனவே கடந்த இரண்டு மாதத்திற்கான கேரள முதலமைச்சர் அலுவலக சிசிடிவி பதிவுகளை கேட்டு என்.ஐ.ஏ கடிதம் அனுப்பியிருக்கிறது.
இந்த நிலையில் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட சுவப்னா சுரேஷ், சந்தீப் ஆகியோர் கொச்சியிலுள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, விசாரணையின் போது மன ரீதியாக தான் துன்புறுத்தப்பட்டதாக சுவப்னா குற்றம்சாட்டினார். அவர்கள் இருவரும் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை, வரும் 5 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இருவரையும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக சரித்தையும் வரும் 21 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டப்பட்டது.
இதனிடையே திருவனந்தபுரத்தில் சுவப்னா சுரேஷின் 2 வங்கி லாக்கரில் இருந்து ஒரு கோடி ரூபாய் ரொக்கம், 982 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் என்ஐஏ தெரிவித்தது.