வெறும் 100 ரூபாய் லஞ்சம் தராத காரணத்தினால் 14 வயது சிறுவன் வைத்திருந்த முட்டைக் கடையை கீழே தள்ளி மாநகராட்சி ஊழியர் ஒருவர் முட்டைகளை உடைத்த சம்பவம் இந்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு இருப்பதால், தெருவோரக் கடைக்காரர்கள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை ஓட்டவே கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலிலும் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 14 வயது சிறுவன் ஒருவன் முட்டைகளை விற்று தன் குடும்பத்துக்கு உதவிகரமாக இருந்து வந்தான்.
இந்த நிலையில், இன்று சிறுவனிடம் வந்த மாநகராட்சி ஊழியர் ஒருவர் அவனிடம் 100 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லாக்டௌன் காரணமாக முட்டை விற்பனையாகவில்லை என்று கூறி சிறுவன் லஞ்சம் கொடுக்க மறுத்துள்ளான். இதையடுத்து, இரக்கமே இல்லாத அந்த ஊழியர் சிறுவன் முட்டை வைத்திருந்த தள்ளுவண்டியை சற்று கூட யோசிக்காமல் கவிழ்த்து விட்டார். இதனால், வண்டியிலிருந்த நூற்றுக்கணக்கான முட்டைகள் உடைந்து சிதறின. மாநகராட்சி ஊழியரின் செய்கையால் அந்த சிறுவன் மனம் நொந்து போனான். சிறுவனிடம் அந்த மாநகராட்சி ஊழியர் இப்படி அடாவடியாக நடந்து கொண்ட போது, அருகிலிருந்த மற்ற ஊழியர்களும் அதை பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர, யாரும் தடுக்க முயலவில்லை.
கொரோனா லாக்டௌன் காரணமாக வருவாயில்லாமல் இருந்த சிறுவன், மாநகராட்சி ஊழியரின் அடாவடி செயலால், இப்போது மொத்தமும் இழந்து வெறுங்கையுடன் நிற்கிறான்...
100 ரூபாய் லஞ்சம் தரவில்லையென்பதற்காக அனைத்து முட்டைகளையும் உடைத்து விட்டு அரக்கன் போல சென்ற அந்த மாநகராட்சி ஊழியரை என்னவென்று சொல்வது?