பாதுகாப்புத் துறைகளில் சீனா முதலீடு செய்வதற்கு மத்திய அரசு தடை அறிவித்துள்ளது. நேரடி அந்நிய முதலீட்டிலும் சீனாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் அரசு ஒப்பந்தங்களை சீன நிறுவனங்கள் இனி பெறமுடியாத சூழல் உருவாகியுள்ளது.
பாதுகாப்புத் துறைகளில் சீனாவின் வர்த்தகத்திற்கு இந்தியா டிசம்பர் 31ம் தேதி வரை தடை விதித்துள்ளது. எல்லையைப் பகிர்ந்துக்கொண்டிருக்கும் நாடுகளுடன் இனி வர்த்தகம் கிடையாது என்று இந்தியா வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா, பாகிஸ்தான், நேபாளம், வங்காளதேசம் ஆகிய நாடுகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும். அரசு அறிவிப்பின் மூலம் சீன நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும், சீன நிறுவனங்கள் புதிதாக அரசு ஒப்பந்தங்கள் கோருவதற்கு உள்துறை, தொழில்துறை, வெளியுறவு அமைச்சகங்களிடமிருந்து அனுமதி பெற வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனாவுக்கான மருந்துகள் கொண்டு செல்வது போன்றவற்றுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்தியாவுடன் வர்த்தக பங்குதாரராக விளங்கும் நாடுகள் நம்பகத்தன்மையைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும் பிரிக்ஸ் மாநாட்டில் காணொலி மூலம் பேசிய மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது சீனாவுக்கு இந்தியா விடுத்துள்ள எச்சரிக்கை என்று கருதப்படுகிறது.