ஹரியானாவில் டீ விற்று பிழைப்பை நடத்துபவருக்கு, 50 கோடி ரூபாயை செலுத்தச் சொல்லி வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார் டீக்கடைக்காரர்.
கொரோனா வைரஸ் பரவலால் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தால் தொழில்துறைகள் பலவும் கடுமையாகப் பாதித்துள்ளன. சிறு தொழிலிலிருந்து கார்பரேட் நிறுவனங்கள் வரை நிதிப் பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கின்றன. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தொழில் நசிந்த டீக்கடைக்காரர் ஒருவர், வங்கிக்கு லோன் கேட்டுப் போயுள்ளார். அப்போது தான் அவர் வாங்காத கடனுக்கு நோட்டீஸ் அளித்து அதிர்ச்சி அளித்துள்ளது, வங்கி நிர்வாகம்.
அந்த டீக் கடைக்காரரின் பெயர் ராஜ்குமார். ஹரியானா மாநிலம் குருஷேத்ராவில் சாலையோரம் டீ விற்று பிழைப்பை நடத்தி வருகிறார். கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இவரால் கடை திறக்க முடியவில்லை. குடும்பத்தை நடத்தவே திணறினார். இவருடன் பணி செய்தவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத சூழலில் ஊருக்கு அனுப்பிவைத்துவிட்டார் ராஜ்குமார். இந்த நிலையில் நிலைமையை சமாளிக்க குருஷேத்திராவில் உள்ள வங்கி ஒன்றுக்கு லோன் கேட்டுச் சென்றுள்ளார்.
விண்ணப்பத்தை ஆய்வு செய்த வங்கி நிர்வாகம், “நீங்கள் ஏற்கெனவே 50 கோடி ரூபாயைக் கடனாக வாங்கியிருக்கிறீர்கள். அதனால் இப்போது உங்களுக்கு கடன் கொடுக்க முடியாது. அந்தக் கடனை எப்போது திரும்ப அடைப்பீர்கள்?” என்று கேட்டுள்ளது. இந்தக் கடனைக் காரணம் காட்டி ராஜ்குமாரின் லோன் விண்ணப்பத்தையும் வங்கி நிர்வாகம் நிராகரித்து, நோட்டீஸ் வழங்கியுள்ளது.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜ்குமார், “சாலையில் டீ விற்று பிழைப்பை நடத்தும் எனக்கு வங்கி நிர்வாகம் எப்படி ஐம்பது கோடி ரூபாய் கடனை வழங்கி இருக்க முடியும்? இது எப்படி சாத்தியம்?” என்று குழம்பி போயுள்ளார்.
டீக்கடைக்காரர் ராஜ்குமார் பெயரில் யாரோ ஒருவர் வங்கியில் மோசடி செய்திருப்பதை உறுதி செய்துள்ளனர் வங்கி அதிகாரிகள். இதுகுறித்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.