அசாமில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் இரண்டாயிரத்து முந்நூற்றுக்கு மேற்பட்ட ஊர்களும், ஒரு லட்சத்துப் பத்தாயிரம் எக்டேர் விளைநிலங்களும் நீரில் மூழ்கியுள்ளன.
அசாமில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பிரம்மபுத்திராவிலும், அதன் துணை ஆறுகளான கொப்பிலி, தன்சிரி, கவுரங், சங்கோஷ் உள்ளிட்டவற்றிலும் கரைபுரண்டு வெள்ளம் பாய்கிறது. இதனால் 24 மாவட்டங்களில் 24 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்மழையாலும் வெள்ளப்பெருக்காலும் இதுவரை 87 பேர் உயிரிழந்ததாக அசாம் மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே அடுத்த இரு நாட்களுக்குக் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பிரம்மபுத்திராவில் நீர்மட்டம் மேலும் ஓரடி உயரும் என்றும் மத்திய நீர்வள ஆணையம் கணித்துள்ளது.