கொரோனா தடுப்பூசி விலை ரூ. 1,000- க்கு விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அஸ்ட்ராஜெனகா நிறுவனத்துடன் இணைந்து கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளது. புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம் ஆக்ஸ்போர்டு பல்கலை கண்டுபிடித்த மருந்தை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய லைசென்ஸ் பெற விண்ணப்பித்துள்ளது.
இந்த நிலையில், சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அடர் பூனாவாலா கூறுகையில், '' ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்தியாவில் 5,000 பேரிடத்தில் கொரோனா மருந்து பரிசோதனை நடத்தப்படவுள்ளது. மருந்து பரிசோதனையில் மனிதர்களிடத்தில் நடத்தப்படும் மூன் றாவது கட்ட பரிசோதனைதான் முக்கியமானது. இதில், சாதகமான முடிவு கிடைத்த பிறகே சந்தையில் மருந்து அறிமுகப்படுத்தப்படும். ஆனாலும் சிறப்பு அனுமதி பெற்று இறுதி முடிவு கிடைப்பதற்கு முன்னரே‘ 200 மில்லியன் டாலர்கள் மதிப்பில் 300 மில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளோம். தடுப்பு மருந்து கடைசி கட்டத்தில் சோதனையடைந்தால், வர்த்தகரீதியாக எங்களுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு தடுப்பூசியின் விலை ரூ. 1,000 என்ற விலையில் சந்தையில் வழங்கப்படலாம். உற்பத்தி செய்யப்படும மருந்துகளில் 50 சதவிகிதம் இந்தியாவுக்கு வழங்கப்படும். மற்றவை பிற நாடுகளுக்கு அளிக்கப்படும்.நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் அரசுகள் எங்களுக்கு பணம் செலுத்தும்.
ஆக்ஸ்போர்டு பல்கலையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் வயதானவர்கள் சோதனைக்கு தேர்வு செய்யப்படவில்லை. ஆனால், அங்கு நடந்த பரிசோதனையில் சாதகமான முடிவு கிடைத்திருப்பதால் இந்தியாவில் நடத்தப்படும் பரிசோதனையில் முதியவர்களும் சுகாதார பணியாளர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். மூன்றவாது கட்ட சோதனைக்கு இரு மாதங்கள் தேவைப்படும். அனேகமாக, நவம்பர் மாதத்தில் இறுதி முடிவு கிடைக்கும். கொரோனாவால் அதிக பாதிப்புக்குள்ளான மும்பை, புனே நகரங்களிலிருந்து தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சீரம் இந்தியா நிறுவனம் மட்டமல்லாமல் 60 நாடுகளை சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனங்களும் இணைந்து 300 கோடி மக்களுக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி செய்யப்படும் ' என்று தெரிவித்துள்ளார்.