காற்று மூலமும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்பதை உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளதால், உள் அரங்குகளில் மக்கள் கூடும் இடங்களிலும் மாஸ்க் அணிய வேண்டும் என சிஎஸ்ஐஆர் எனப்படும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கவுன்சில் கூறியுள்ளது.
சிஎஸ்ஆர் தலைவர் சேகர் மாண்டே தமது இணைய பிளாக்கில் வெளியிட்டுள்ள குறிப்பில், பல ஆய்வுகளை மேற்கோள் காட்டி, இது தொடர்பாக கிடைக்கும் ஆதாரங்கள் மற்றும் ஆராய்ச்சிகளின் அடிப்படையில், காற்று வழியான தொற்று சாத்தியமே என கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களை தவிர்த்து, மூடப்பட்ட அறைகளில் காற்றோட்டத்தை உறுதி செய்வதுடன், உள் அரங்குகளிலும் மாஸ்க் அணிவதும் மட்டுமே காற்று மூலமான தொற்றை தவிர்க்கும் வழி என அவர் கூறியிருக்கிறார்.
தொற்றுபாதித்த நபர் இருமும் போதோ, தும்மும் போதோ வெளிப்படும் சளி போன்ற பெரிய திரவ துளிகள் காற்றில் அதிக தூரம் செல்லாது என்றாலும், வைரஸ் அடங்கிய மிக நுண்ணிய துளிகள் காற்றில் வெகுநேரம் நீடித்து நிற்க வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.