கொரோனா வைரசுக்கான தடுப்பூசி நடப்பாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கிடைக்கப் பெறலாம் என, எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவாக்சின் மருந்து, பரிசோதனையில் உள்ள இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியாகும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பு மருந்து மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு மூன்று கட்டமாக பரிசோதிக்கப்பட உள்ளது. இதற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை உட்பட 12 மருத்துவமனைகளை ஐ.சி.எம்.ஆர். தேர்வு செய்துள்ளது.
இந்நிலையில், மனிதர்கள் மீதான கோவாக்சின் பரிசோதனை தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா விளக்கமளித்தார். முதற்கட்டமாக 18 முதல் 55 வயதுக்குட்பட்ட எந்தவித நோய்த்தொற்று பாதிப்பும் இல்லாத, ஆரோக்கியமான உடல்நலம் கொண்ட 375 பேரின் மீது பரிசோதனை நடத்தப்பட உள்ளதாகவும், இதில் பாதுகாப்பு மற்றும் செலுத்தப்பட வேண்டிய மருந்தின் அளவு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இரண்டாம் கட்ட பரிசோதனையில், 12 முதல் 65 வயதுக்கு உட்பட்ட ஆரோக்கியமான உடல்நலம் கொண்ட 750 பேரின் மீது ஆய்வு நடத்தபடும் என்றும், இதில் கோவாக்சின் எவ்வளவு நோய் எதிர்ப்பு திறன் கொண்டது என்பது தொடர்பாக மதிப்பிடப்படும் எனவும் குலேரியா தெரிவித்தார்.
இறுதி கட்டமாக அதிகபட்ச தன்னார்வலர்களைக் கொண்டு நடத்தப்படும் பரிசோதனையில், கோவாக்சினின் செயல்திறன் மற்றும் சிகிச்சையின் நன்மை தொடர்பாக ஆராயப்படும் என குலேரியா குறிப்பிட்டார்.
மருந்து எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது குறித்து பதிலளித்த அவர், தடுப்பூசியின் செயல்திறன் குறைந்தது 6 மாத காலத்திற்கு பரிசோதிக்கப்பட்டு, அனைத்து நடைமுறைகளும் சிறப்பாக நிறைவேற்றப்பட்டால், நடப்பாண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசிக்கான உற்பத்தியை தொடங்கலாம் என பதிலளித்தார்.
உள்நாட்டு மருந்து மட்டுமின்றி உலகின் வேறு எந்த பகுதியில் தடுப்பூசி கண்டறியப்பட்டாலும், அதனை தயாரிக்கும் திறனை இந்தியா கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தேசிய அளவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறியதற்கான ஆதாரங்கள் இல்லை எனவும், உள்ளூர் அளவில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே கொரோனா சமூக பரவலாக மாறியுள்ளதாகவும் குலேரியா தெரிவித்தார்.