ஈரான் நாட்டு இயக்குநர் மஜித் மஜிதி இயக்கிய 'முகமது- தி மெஸ்ஸஞ்சர் ஆஃப் காட் ' என்ற திரைப்படம் 2015- ம் ஆண்டு வெளியானது. இந்த படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார் . இந்த படத்தை ஜூலை 21- ந் தேதி இந்தி மொழியாக்கத்தில் ஆன்லைனில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. யுடியூப்பில், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் மீண்டும் வெளியாகிறது. அதே வேளையில் இந்த படத்தை வெளியிட கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
முகமது நபிகளின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் இஸ்லாமிய மத நம்பிக்கைக்கு விரோதமான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக இஸ்லாமிய மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மும்பையை சேர்ந்த சன்னி மக்களின் அமைப்பான ராஸா அகாடமி இந்த படத்துக்கான உரிமத்தை வைத்துள்ள டான் படநிறுவன அதிபர் முகமது அலியை இது தொடர்பாக சந்தித்தனர்.
ஏ.ஆர். ரகுமான் மற்றும் இயக்குநர் மஜித் மஜிதி
அப்போது, படத்தை ஆன்லைனில் படத்தை வெளியிட வேண்டாமென்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், முகமது அலி அதற்கு மறுத்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. 'ஏற்கெனவே, சமூகவலைத் தளங்களில் இந்த படம் வெளியாகி விட்டது. முதலில் அவற்றை நிறுத்துங்கள். பிறகு, எங்களிடத்தில் வாருங்கள்''என ராஸா அகாடமி நிர்வாகிகளிடத்தில் முகமது அலி பதில் அளித்துள்ளார்.
மகராஷ்டிரத்தில் இந்தப் படம் வெளியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் கூறுகையில், ''ராஸா அகாடமியிடத்திலிருந்து எங்களுக்கு புகார் வந்துள்ளது. மத நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் படத்தில் காட்சிகள் இருப்பதால், மத்திய அரசு இந்த படத்துக்கு தடை விதிக்க கடிதம் எழுதியுள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய மத குருக்கள் இந்தப் படத்துக்கு தடை விதிக்க கோரி பிரதமர் மோடியை சந்திக்க முடிவு செய்துள்ளனர். அகில பாரதிய தான்ஷீம் உலமா இ இஸ்லாம் அமைப்பின் பொதுச் செயலாளர் மௌலானா சாகாபுதின் கூறுகையில், ''இது ஒரு ஈரானிய திரைப்படம். நபிகளின் வாழ்க்கை வரலாற்றை ஷியா மக்களின் வழக்கப்படி சித்தரித்துள்ளது. இந்தியாவில் வாழும் பெரும்பான்மையான முஸ்லிம் மக்களின் மனம் இதனால் காயப்படும். பிரதமர் மோடியை சந்தித்து முறையிட அனுமதி கேட்டுள்ளோம். பிரதமர் மோடி இந்த படத்துக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுப்பார்'' என்று கூறியுள்ளார்.