கொரோனா உயிரிழப்புகள் சர்வதேச அளவில் 3.41 சதவிகிதமாக இருக்கும் போது, இந்தியாவில் அது குறைவாக 2.5 என்ற சதவிகிதத்தில் மட்டுமே இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 5 மாதங்களில் முதல் முறையாக இறப்பு விகிதம் இந்த அளவுக்கு குறைந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் இது 3.23 சதவிகிதமாக இருந்தது. இந்தியாவின் இறப்பு விகிதம் உலக நாடுகளில் குறைந்த இறப்பு விகிதங்களில் ஒன்றாக உள்ளது. அது மட்டுமின்றி மணிப்பூர், நாகாலாந்து, சிக்கிம், மிசோரம் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் கொரோனா உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தேசிய இறப்பு விகிதம் 2.5 ஆக இருந்தாலும், தமிழகத்தில் அது 1.45 என்ற அளவிலேயே உள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இறப்பு விகிதம் தேசிய சராசரியை விடவும் குறைவாக உள்ளது. 14 மாநிலங்களில் இறப்புவிகிதம் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கிறது.
அதிக எண்ணிக்கையிலான சோதனைகள், கொரோனா தொற்றாளர்களை கண்டறிவதில் காட்டப்படும் தீவிரம் மற்றும் நல்ல மருத்துவ வசதிகள் காரணமாக கொரோனா இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.