இந்தியாவில் உள்ள சீன நிறுவனங்களுக்குச் சீன ராணுவத்துடன் தொடர்புள்ளதா என அரசு ஆய்வு செய்து வருகிறது.
இந்தியாவில் உள்ள பல வெளிநாட்டு நிறுவனங்களில் சீன முதலீடு இருப்பதாகவும், இந்தியாவில் உள்ள சீன நிறுவனங்களுக்குச் சீன ராணுவத்துடன் தொடர்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதா என ஆய்வு செய்த பின்னரே நேரடி வெளிநாட்டு முதலீட்டுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது.
வெளிநாட்டு மறைமுக முதலீடு இந்தியச் சந்தையைப் பாதிக்காது என உறுதி செய்த பின்னரே அவற்றுக்கு நிதியமைச்சகமும், செபி அமைப்பும் அனுமதி அளிக்கின்றன.
ஹுவேய் (Huawei), இசட் டி இ (ZTE) ஆகிய தொலைத்தொடர்புக் கருவிகள் உற்பத்தி நிறுவனங்களுக்கும் சீன ராணுவத்துடன் தொடர்புள்ளதாகக் கூறப்பட்டுப் பல நாடுகளில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
ஹுவேய் மட்டுமல்லாமல் சீன முதலீட்டுடன் தொடங்கப்பட்டுள்ள புதிய நிறுவனங்களையும் அரசு கண்காணித்து வருகிறது. இதேபோல் இந்தியாவில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்களில், சீனா முதலீடு செய்துள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.