இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் புதிதாக 38 ஆயிரத்து 902 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 77 ஆயிரத்து 618 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கை நடைமுறைப்படுத்தியுள்ளதுடன் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இருப்பினும் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஞாயிறு காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38 ஆயிரத்து 902 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரேநாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் அதிக அளவாகும்.
பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 77 ஆயிரத்து 618 ஆக உயர்ந்துள்ளது. 6 லட்சத்து 77 ஆயிரத்து 423 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 26 ஆயிரத்து 816 பேர் உயிரிழந்தனர்.
3 லட்சத்து 73 ஆயிரத்து 379 பேர் தற்போதைய நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜூலை 18 வரை ஒரு கோடியே 37 லட்சத்து 91 ஆயிரத்து 869 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளன. சனிக்கிழமை ஒரே நாளில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 127 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.