மத்திய தொலைத் தொடர்பு துறைக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையில் மேலும் ஆயிரம் (1,000)கோடி ரூபாயை வோடபோன் ஐடியா நிறுவனம் செலுத்தியுள்ளது.
புதிய தொலைத்தொடர்பு கொள்கையின்படி, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் மொத்த வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை (adjusted gross revenue) உரிம கட்டணமாக மத்தியத் தொலைத் தொடர்பு துறையிடம் செலுத்த வேண்டும். இதை எதிர்த்து தொலைபேசி நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, வோடபோன் ஐடியா நிறுவனம் 53,038 கோடியும், ஏர்டெல் 35,586 கோடியும், டாடா டெலி சர்வீசஸ் 13,823 கோடியும் செலுத்த உத்தரவிடப்பட்டது. இதில் வோடபோன் ஐடியா நிறுவனம் 3 தவணைகளாக இதுவரை 6 ஆயிரத்து 854 கோடி ரூபாயை செலுத்தியிருந்தது. இந்நிலையில் மத்திய தொலைத் தொடர்புத் துறையிடம் தற்போது 4ஆவது தவணையாக ஆயிரம் கோடி ரூபாயை அந்நிறுவனம் செலுத்தியுள்ளது.