திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அமீரக எமிரேட்ஸ் துணைத் தூதரகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் ஒருவர் கை நரம்பை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அமீரக எமிரேட்ஸ் துணைத் தூதரகத்தின் பேரில் தங்கக்கடத்தல் செய்யப்பட்ட விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில், அமீரக துணைத் தூதருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஜெயகோஷ் என்ற போலீஸ்காரருக்கும் தங்கக் கடத்தல் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டது.
இதனால், என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்த வருவார்கள் என்ற அச்சத்தில் இருந்துள்ளார். தங்கக்கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஸ் ஜெயகோஷ் செல் போனுக்கு அழைத்து பேசியிருப்பதாகவும் தகவல் உள்ளது.
இது குறித்து, ஜெயகோஷ் நண்பர்கள் அவரை கேலி பேசி பயமுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் வியாழக்கிழமை காலை 7 மணியளவில் வீட்டை விட்டு ஜெயகோஷ் மாயமாகியுள்ளார். அவரின் மனைவி போனில் தொடர்பு கொண்ட போது செல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. தும்பா போலீஸ் நிலையத்தில் ஜேயகோஷ் மனைவி புகாரளித்தார்.
போலீஸார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், தன் வீட்டருகேயுள்ள குளத்து கரையில் கையை பிளேடால் அறுத்துக் கொண்டு போலீஸ்காரர் ஜெயகோஷ் மயங்கிய நிலையில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ரத்தம் வெளியேறிய நிலையில் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்பிடையே திருவனந்தபுர அமீரத்தின் துணைத் தூதர் டெல்லி வழியாக துபாய் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது.