நியூயார்க் நகரில் இருந்து செயல்படும் ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக சபை உயர்மட்ட கூட்டத்தில் இன்று பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
ஐநா.சபையின் 75வது ஆண்டு நிறைவையொட்டி சர்வதேச மாநாடு ஒன்று நடைபெறுகிறது. காணொலி வாயிலாக இந்த மாநாட்டை பிரதமர் மோடி ஐநா.சபையின் மூத்த தலைவர்களுடன் இணைந்து தொடங்கி வைக்கிறார். காணொலி காட்சி மூலம், உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை பிரதமர் உரையாற்றுகிறார்.
உலகில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை மாற்றம், கொரோனாவுக்குப் பிந்தைய பிரச்சினைகள் குறித்தும் சர்வதேச ஒத்துழைப்பு, வர்த்தகம், பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி தமது உரையில் முக்கிய விவாதங்களை எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தின் இறுதி நிகழ்ச்சியில் நார்வே பிரதமர் மற்றும் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் ஆகியோருடன் இணைந்து மோடி கலந்துரையாடுகிறார்.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தேர்வான பின்னர், முதல்முறையாக பிரதமர் உரை நிகழ்த்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.