கேரளாவில் தங்கக் கடத்தல் விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தங்கக்கடத்தலில் முக்கிய புள்ளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேசுடன் தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலர் சிவசங்கர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நேரடியாக சிவசங்கரன் மீது குற்றச்சாட்டு எழவில்லையென்றாலும் முதல்வரின் முதன்மைச் செயலர் ஒருவரே குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுடன் தொடர்பில் இருந்தது ஏன் என்கிற புகார் சிவசங்கர் மீது எழுந்துள்ளது.
கேரளாவில் இவரை விட சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் இருக்கையில் கன்ஃபர்ட் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவரை பினராயி விஜயன் தனக்கு முதன்மைச் செயலராக நியமித்திருந்தார். பணியில் திறமை மிக்கவர் என்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்தியில் இவருக்கு நல்ல பெயர் இருந்தது. எத்தகைய பிரச்னை என்றாலும் தீர்த்து வைக்கும் திறமையும் சிவசங்கரிடத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
திறமைசாலி என்ற காரணத்தால், பினராயி விஜயன் விரும்பி இவரை தன்னருகில் வைத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. அப்போதே, மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் அதிருப்தி அடைந்தனர். கேரளாவில் முதல்வரின் முதன்மைச் செயலர் என்ற இத்தகையை அந்தஸ்த்தை எட்டிய ஒரே கன்ஃபர்ட் ஐ.ஏ.எஸ் அதிகாரி இவர்தான். பொதுவாக கேரள முதல்வர்கள் நேரடி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையே முதன்மைச் செயலராக வைத்துக் கொண்டிருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிவசங்கர் இன்ஜீனியரிங் படித்தவர், எம்.பி.ஏ பட்டமும் பெற்றுள்ளார். ரிசர்வ் வங்கியில் பணியை தொடங்கினார். பின்னர், கேரள மாநில சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி துணை ஆட்சியராகியுள்ளார். தொடர்ந்து 1995- ம் ஆண்டு கன்ஃபர்ட் ஐ.ஏ.எஸ் ஆக்கப்பட்டுள்ளார்.
கேரளா அரசின் பல துறைகளிலும் செயலராக பணியாற்றியுள்ளார். கேரள மாநில மின்வாரியத்துறை தலைவராகவும் இருந்துள்ளார். முதல்வரின் முதன்மைச் செயலர் பதவியில் இவர் நியமிக்கப்பட்டதற்கு, கேரள ஐ.ஏ.எஸ் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கத்திலிருந்து வெளியேறிய சிவசங்கரன், அந்த அமைப்புடன் முற்றிலும் தொடர்பை துண்டித்து கொண்டார்.