மும்பையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்தில் மிகக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுத்துறை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவா, மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மும்பையில் செவ்வாய் மாலையில் இருந்து தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.புறநகர்ப் பகுதியான தகானுவில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. விடாமல் பலத்த மழை பெய்து வருவதால் கிங்ஸ் சர்க்கிள், அந்தேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளிலும் தாழ்வான இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி மெதுவாகச் செல்கின்றன.
மும்பை, பால்கர், தானே உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிகக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மழைநீர் தேங்கியுள்ள இடங்களுக்குப் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும், கடலோரத்தில் குடியிருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுமாறும் மும்பை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.