இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை விரைவு படுத்த உதவும் நோக்கில் 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதித் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் டிஜிட்டல் இந்தியா பற்றிய பிரதமர் மோடியின் தொலைநோக்குத் திட்டங்களுக்கு உதவுவதில் பெருமை கொள்வதாக கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு இந்தியருக்கும் அவரது தாய்மொழியான இந்தி, தமிழ், பஞ்சாபி உள்ளிட்டவற்றில் குறைந்த செலவில் தகவல் தொழில்நுட்ப வசதியை அளிக்கவும், இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்றவாறு புதிய மற்றும் பொருள்களை உருவாக்கவும் இந்த நிதியில் இருந்து முதலீடு செய்யப்படும். இந்த நிதி, அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு பயன்படுத்தப்படும் எனவும் கூகுள் தெரிவித்துள்ளது.
முன்னதாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகள், மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோரின் வாழ்க்கையில் மாற்றங்களை எற்படுத்துவது பற்றி சுந்தர் பிச்சையுடன் விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளார். தரவுகளின் பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பு குறித்தும் சுந்தர் பிச்சையுடன் விவாதித்த தாக தெரிவித்துள்ள மோடி, கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள புதிய தொழில் கலாச்சாரம் பற்றியும் தாம் சுந்தர் பிச்சையுடன் ஆலோசித்ததாக கூறியுள்ளார்.