இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 8 லட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 28 ஆயிரத்து 637 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 8 லட்சத்து 49 ஆயிரத்து 553 ஆக உயர்ந்துள்ளது.
அதே போல் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 551 பேர் கொரோனா தொற்றுக்கு பலியானதை அடுத்து, நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 22 ஆயிரத்து 674 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 5 லட்சத்து 34 ஆயிரத்து 621 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 92 ஆயிரத்து 258 பேர் மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகராஷ்டிர மாநிலத்தில் 2 லட்சத்து 46 ஆயிரத்து 600 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 10 ஆயிரத்து 116 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கடுத்தபடியாக 1 லட்சத்து 34 ஆயிரத்து 226 பாதிப்புகள் மற்றும் ஆயிரத்து 898 உயிரிழப்புகளுடன் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது.
மூன்றாமிடத்தில் உள்ள டெல்லியில் 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், நான்காமிடத்தில் உள்ள குஜராத்தில் 40 ஆயிரத்து 942 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.