கொரோனா தொற்றால் நலவாழ்வு, பொருளாதாரம் ஆகியவை நூறாண்டுகளில் இல்லாத வகையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கி நடத்திய வங்கியியல் மற்றும் பொருளாதாரம் பற்றிய கருத்தரங்கில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் உரையாற்றினார். அப்போது, கொரோனா தொற்றால் சுகாதாரம், பொருளாதாரம் ஆகியவை கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும், இது உற்பத்தி, வேலை, நல்வாழ்வு ஆகியவற்றுக்கு எதிர்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
நமது பொருளாதார அமைப்பின் வலுவைச் சோதிக்கும் வகையில் கொரோனா பெருந்தொற்று சூழல் அமைந்துள்ளதாகவும் சக்தி காந்த தாஸ் குறிப்பிட்டார்.
2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து இப்போது வரை வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை இரண்டரை விழுக்காடு குறைத்துள்ளதாக சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.